அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் இரும்பு மற்றும் எஃகு பயன்படுத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கோவில் கட்டுமானம் குறித்த அரிய தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ராமர் கோவில் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு வருவதாகவும், கட்டுமான பணியில் இந்திய உயர் விஞ்ஞானிகள் பங்களித்துள்ளதாகவும் கூறினார்.இஸ்ரோ தொழில்நுட்பங்கள் கூட கோவிலில் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கோவிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர் மற்றும் கட்டப்பட்ட பகுதி சுமார் 57,000 சதுர அடி. இது மூன்று தள அமைப்பாக இருக்கும் என்று நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
இரும்பின் ஆயுட்காலம் 80-90 ஆண்டுகள் என்பதால் கோயிலில் இரும்போ எஃகும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மிக தரமான கிரானைட், மணற்கல் மற்றும் பளிங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் மூட்டுகளில் சிமென்ட் அல்லது சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்படவில்லை என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2,500 ஆண்டு கால நிலநடுக்கத்தை எதிர்க்கும் வகையில் 3 மாடி கட்டமைப்புகளின் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
சரயு நதி அருகே ஓடுவதால் கோவிலுக்கு அடியில் மணல் நிறைந்து காணப்பட்டதாகவும், நிலையற்றதாகவும் இருந்துள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக கோவில் பகுதி முழுவதும் 15 மீட்டர் ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டது. இப்பகுதியில் 12-14 மீட்டர் ஆழத்திற்கு மண் போடப்பட்டது, எஃகு ரீ-பார்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.பின்னர் 47 அடுக்கு தளங்கள் கெட்டியான பாறை போல் ஆக்கப்பட்டது.