75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை, டெல்லியில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் உள்ளிட்டவைகள் பறக்க டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்கிறார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தலைநகர் டெல்லியில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் உள்ளிட்டவைகள் பறக்க டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.