பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், செய்தியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புச் செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், புதிதாக 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அயோத்தியில் மருத்துவத் தயார் நிலையை மேம்படுத்தும் நோக்கில் கணிசமான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதேபோல, உத்தரப் பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.
அதன்படி, மேளா பகுதியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், 16 முதலுதவிச் சாவடிகள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் துளசி உத்யானில் 20 படுக்கைகள், டென்ட் சிட்டியில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் கூடிய 2 தற்காலிக கள மருத்துவமனைகள் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.
இந்த நிலையில், அயோத்தியில் உள்ள ஊடக ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அபூர்வ சந்திரா, “ஊடகவியலாளர்களுக்கு அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கும் வகையில், நகரில் ஒரு ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அயோத்திக்கு வந்து இந்த மாபெரும் நிகழ்வை ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மருத்துவ வசதிகள் 24 மணி நேரமும் இருக்கும்” என்றார்.
ஏர் வைஸ் மார்ஷல் தன்மோய் ராய் கூறுகையில், “ஆரோக்ய மைத்ரீ திட்டத்தின் கீழ், அயோத்தியில் பீஷ்ம் ட்ரௌமா சென்டர் நிறுவப்பட்டிருக்கிறது. இது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் குறைந்தது 200 பேருக்கு சுகாதார வசதியை வழங்கும்” என்றார்.
அயோத்தியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள் குறித்து ஏற்கெனவே மத்திய சுகாதாரச் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்து, மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்தினர்.
இது தவிர, ராஜர்ஷி தஷ்ரத் ராஜ்கியா மருத்துவக் கல்லூரியை 350-ல் இருந்து 550 படுக்கைகளாக விரிவுபடுத்துவதற்கு மத்திய ஆதரவு அனுமதி அளித்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.
கூடுதலாக, புதுடெல்லியில் உள்ள AIIMS-ல் உள்ள JPNA ட்ராமா சென்டரில் இருந்து ஒரு குழு வரவழைக்கப்பட்டு, அயோத்தியில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை ஆதரவு, இதய நுரையீரல் புத்துயிர் CPR, டிரேஜ் நுட்பங்கள், அவசரநிலை மற்றும் ட்ராமா கேர் ஆகியவற்றில் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.