குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “அம்ரித் உத்யன்” எனப்படும் தோட்டங்கள், பிப்ரவரி 2-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்பாக, அவை ‘முகல்’ (முகலாய) தோட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்கள், பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் ‘உத்யன் உத்சவ் 2024’ நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 2 முதல் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுத் தோட்டங்களைத் திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “உத்யன் உத்சவ் I-2024” திட்டத்தின் கீழ் ராஷ்டிரபதி பவனின் “அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். மக்கள் திங்கட்கிழமைகள் தவிர வாரத்தில் 6 நாட்களும் உத்யனை பார்வையிடலாம்.
அதேசமயம், அம்ரித் உத்யன் குறிப்பிட்ட தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்காக மட்டுமே திறக்கப்படும். பிப்ரவரி 22-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும், 23-ம் தேதி பாதுகாப்பு, துணை இராணுவம் மற்றும் போலீஸ் படைகளுக்கும், மார்ச் 1-ம் தேதி பெண்கள் மற்றும் பழங்குடியின பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கும், 5-ம் தேதி அனாதை இல்ல குழந்தைகளுக்கும் நடத்தப்படும்.
பார்வையாளர்கள் 6 மணி நேர இடைவெளிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE-ல் முன்பதிவு செய்யலாம். வாக் இன் பார்வையாளர்கள், ராஷ்டிரபதி பவனின் கேட் எண்.12-க்கு அருகில் உள்ள கவுண்டர்கள் அல்லது சுய சேவை கியோஸ்கில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவு மற்றும் வெளியேறுதல் வழியாக குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டத்தின் கேட் எண்.35 இருக்கும். அதேபோல, பார்வையாளர்களின் வசதிக்காக, மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து கேட் எண்.35-க்கு ஷெட்டில் பேருந்து சேவை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இயக்கப்படும்.
சுற்றுப் பயணத்தின்போது, பார்வையாளர்கள் போன்சாய் தோட்டம், இசை நீரூற்று, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம் வழியாகச் செல்வார்கள். வெளியேறும் இடத்தில் அவர்களுக்கான உணவு விடுதிகள் இருக்கும்.
பார்வையாளர்கள் மொபைல் போன்கள், எலெக்ட்ரானிக் சாவிகள், பர்ஸ்/கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். பொதுப் பாதையில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை, முதலுதவி அல்லது மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பல்வேறு தோட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே, கிழக்குப் புல்வெளி, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்ட தோட்டம் ஆகியவை இருந்தன. அதன் பிறகு, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரது பதவிக் காலங்களில், மூலிகை-I, மூலிகை-II, தொட்டுணரக்கூடிய தோட்டம், போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் என பல தோட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.