ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் மத்திய அரசு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜனவரி 22ஆம் தேதி பள்ளிகளை மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநில மக்களும் கோவில் திறப்பு விழாவை ரசிக்க வேண்டும் என்றும், எனவே அதை அன்றைய தினம் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் மஜும்தார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அதே நாளில் நல்லிணக்க பேரணி நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. காளிகாட் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு, மசூதிகள், சர்ச் மற்றும் குருத்வாராவை தொட்டு மத்திய கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸில் பேரணியில் மம்தா உரையாற்ற உள்ளார்.
ஆனால் திரிணாமுல் காங்கிரசின் பேரணி இந்துக்களுக்கு எதிரானது என மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து குற்றம்சாட்டியுள்ளார்.