அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 95 லட்சம் பேரும் அழைப்பிதழ் வைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை ஆகிய விழாக்கள் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கின்றன.
இந்த விழாவில் கலந்துகொள்ளும்படி, நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் 1 கோடி பேருக்கு அழைப்பிதழ் வழங்க, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் திட்டமிட்டு களமிறங்கி இருக்கின்றன.
அந்த வகையில், தமிழகத்திலும் 1 கோடி பேருக்கு அழைப்பிதழ் வழங்க இலக்கு நிர்ணயித்து இந்து அமைப்புகள் களமிறங்கின. இப்பணியை இன்றைக்குள் (20-ம் தேதி) முடிக்க திட்டமிட்டிருந்தனர். இதில், இதுவரை சுமார் 95 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
மீதமுள்ள குடும்பங்களுக்கு நாளைக்குள் (21-ம் தேதி) அழைப்பிதழ் வழங்க திட்டமிட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் இராமர் படம், அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் தொண்டர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணியின்போது ஊர்வலம் போல செல்லுதல், வாத்தியங்கள் முழங்க செல்லுதல், ஆஞ்சநேயர் வேடத்துடன் செல்வது என்று விதவிதமாக செல்கிறார்கள்.