ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கிய பிரதமர் மோடி தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார்.
3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். ராமானுஜர், சக்கர்த்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடிய கம்பராமாயணத்தை அவர் கேட்டார்.
ஸ்ரீரங்கம் பயணத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் மலர்களை தூவி அவரை வரவேற்றனர். அப்போது காரில் நின்றவாறு கையசைத்தபடி வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் பிரதமர் புனித நீராடினார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய மோடி இன்று காலை தனுஷ்கோடி புறப்பட்டார். தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித நீராடுகிறார். பின்னர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார். தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.
பின்னர் ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அயோத்தி செல்கிறார். அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.