75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு சார்பில், குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, குடியரசு தின விழா கொண்டாட்டங்களைச் சீா்குலைக்க சதித்திட்டம் நடந்து வருவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி வருகிறது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், முக்கிய இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு, வருகை பகுதி வளாகங்கள் அருகே வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி விமான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னை விமான நிலைய வாகன நிறுத்துமிடங்களில், பல நாட்களாக நிற்கும் வாகனங்களை சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், தீவிரமாக சோதனை செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வருகிற 30-ஆம் தேதி நள்ளிரவு வரை, இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். குடியரசு தினத்திற்கு முன்னதாக பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.