அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில், 763 கிராம் எடை கொண்ட சுமார் 49 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருவதும், இதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, அதிரடியாக பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, அபுதாபியில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை சோதனை செய்தனர். சோதனையில் பேஸ்ட் வடிவில் 763.36 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து, அந்த பெண் பயணி கடத்தி வந்த, 763.36 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 49 இலட்சத்து 7 ஆயிரத்து 641 ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.