கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் ஸ்ரீகோடல்தாம் அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கணொலி வாயிலாக மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகையில், “எந்தவொரு நாடும் வளர்ச்சியடைய வேண்டுமானால், மக்கள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருக்க வேண்டும்.
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவை கொண்டு வந்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இன்று 6 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதேபோல, கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சுகாதாரத் துறையில் குஜராத் அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் குஜராத் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. மாநிலம் இந்தியாவின் பெரிய மருத்துவ மையமாக மாறி வருகிறது.
2002 வரை குஜராத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இன்று இதன் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது.