ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அப்போது, பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78-வது கூட்டத் தொடரின் தலைவராக இருப்பவர் டென்னிஸ் பிரான்சிஸ். இவரை இந்தியா வரும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்தார். இதன் பேரில், 5 நாள் பயணமாக டென்னிஸ் நாளை இந்தியா வருகிறார்.
ஜனவரி 26-ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் டென்னிஸ் பிரான்சிஸ், பரஸ்பர நலன் சார்ந்த முக்கியமான பலதரப்புப் பிரச்சனைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான சீர்திருத்தங்களுக்கான இந்தியாவின் அழைப்பு, பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம், குறிப்பாக வளரும் நாடுகளுக்கு சமபங்கு மற்றும் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டென்னிஸ் பிரான்சிஸின் இந்தியப் பயணம், இந்தியா – ஐ.நா. உறவுகளை வலுப்படுத்த, குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் பிரதிநிதித்துவ அமைப்பான பொதுச் சபையுடனான உறவுகளை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது.
இந்திய முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய தெற்கு எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இந்தப் பயணம் இருக்கும். மேலும், இந்திய உலக விவகார கவுன்சிலில் “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் உரையாற்றுகிறார்.
இது தவிர, டென்னிஸ் தனது பயணத்தின்போது டெல்லி தவிர, ஜெய்ப்பூர் மற்றும் மும்பைக்கும் பயணம் செய்வார். மும்பையில், 26/11 நினைவிடத்தில் 2008 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். கூடுதலாக, தேசிய பங்குச் சந்தைக்குச் சென்று ஒரு அமர்வில் உரையாற்ற உள்ளார்.
குறிப்பாக, ஜனவரி 26-ம் தேதி, மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் டென்னிஸ் பிரான்சிஸ் மாநில விருந்தினராகப் பங்கேற்கிறார். அப்போது, இந்தியாவின் ஜனநாயக மரபுகளின் முக்கியத்துவத்தையும், உலக அரங்கில் அதன் குறிப்பிடத்தக்க பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அவரது வருகை முடிவடையும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.