அயோத்தி இராமர் கோவிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழாவைக் காண பக்தர்களுக்காக சரயு நதியில் 1,100 சதுர அடியில் மிதக்கும் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்படவிருக்கிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரதிஷ்டை விழா நாளை மதியம் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லாவை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட சுமார் 8.000 வி.வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 100 உயரதிகாரிகள் இராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அதோடு, இராமர் பிரதிஷ்டையைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான இராம பக்தர்கள் அயோத்தியில் திரண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் கோயிலுக்குள் சென்று நிகழ்வைக் காண்பது சாத்தியமில்லை என்பதால், பிரான் பிரதிஷ்டை நிகழ்வை பக்தர்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப கோவில் அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதையொட்டி, கோவில் வளாகம் மற்றும் அயோத்தி நகரின் பல்வேறு பகுதிகளில் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பிரான் பிரதிஷ்டை விழாவை பக்தர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக குஜராத் நிறுவனம் சார்பில் அயோத்தி சரயு நதியில் இந்தியாவின் மிகப்பெரிய எல்.இ.டி. மிதக்கும் திரை நிறுவப்பட்டுள்ளது. இத்திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி.
இதுகுறித்து மிதக்கும் எல்.இ.டி. திரையின் நிர்வாக இயக்குனர் அக்ஷய் ஆனந்த் கூறுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் எல்.இ.டி. திரையை குஜராத் நிறுவனம் ஒன்று ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வுக்காக தயாரித்துள்ளது. மிதக்கும் எல்.இ.டி. திரை தோராயமாக 1,100 சதுர அடியாகும்” என்றார்.