சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையில், இன்று காலை கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைக்காக வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும்.
மண்டல – மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் மண்டல பூஜை முடிவடைந்ததும் இரவு நடை சாத்தப்பட்டது.
இதை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. மகர ஜோதியை இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், மண்டல – மகரவிளக்கு சீசன் நிறைவாக, கடந்த 19-ஆம் தேதி காலை நெய் அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திருவாபரண பெட்டி பந்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பின், சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டு, பந்தள மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை சபரிமலை மேல்சாந்தி ஒப்படைத்தார்.
மீண்டும சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி, மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் என்று கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது