சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மண்டல – மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் மண்டல பூஜை முடிவடைந்ததும் இரவு நடை சாத்தப்பட்டது.
இதை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையில், இன்று காலை கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 வருமானம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு மண்டல – மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில், மொத்த வருமானம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், கோவிலுக்கு கிடைத்த மொத்த வருமானம், ரூபாய் 347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 10 கோடியே 35 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
அரவணை பிரசாதம் விற்பனை மூலம் 146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ரூபாயும், அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் 17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 ரூபாயும் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு சுமாா் 44 லட்சம் பக்தா்கள் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்த நிலையில், இம்முறை சுமாா் 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தா்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனா் என்று கூறினர்.