ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் நிலையில் வண்ண விளக்குகளுடன் ஒளிரும் அயோத்தி மாநகரம், ஆட்டம் பாட்டம் என களைகட்டுகிறது.
வண்ண வண்ண பூக்கள், காவிக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தெருக்கள், எங்கும் எதிரொலிக்கும் ராமர் பாடல்கள், ராமர், சீதை மற்றும் அனுமான் வேடமிட்ட மக்கள் என களைகட்டியுள்ளது அயோத்தி நகரம்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனையடுத்து அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது. ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்குச் செல்லும் ராமர் பாதையில் பல இடங்களில் சிறிய மேடைகள் கட்டப்பட்டுள்ளன.
பதாவா, சாரி, குமர், தோபியா, ராய், ராஸ்லீலா, மயூர், காயல் நிருத்யா மற்றும் சதாரியா போன்ற நாட்டுப்புற நடனங்கள் நகரம் முழுவதும் நடத்தப்படுகின்றன. ராமர் கோவிலுக்குச் செல்லும் தெருக்கள் ஒரு மினி இந்தியாவைப் போல் காட்சியளிக்கின்றன.
நாடு முழுவதும் இருந்து வரும் நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் வழிப்போக்கர்கள் வீடியோ எடுக்கவும், செல்ஃபி எடுக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
‘ பிரான் பிரதிஷ்டை’ விழாவை முன்னிட்டு அயோத்தி அழகுபடுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாலங்களில் உள்ள தெருவிளக்குகள் ராமரை சித்தரிக்கும் கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
வில் மற்றும் அம்புகளின் கட்அவுட்கள் மற்றும் அலங்கார விளக்கு கம்பங்கள் பாரம்பரிய ‘ராமானந்தி திலகத்தின்’ கருப்பொருளைக் கொண்ட வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் சர்ச்சைக்குரிய இடத்திற்கு இட்டுச் சென்ற குறுகிய தெரு இரட்டை, இருவழிப் பாதையாக விரிவுபடுத்தப்பட்டது. கடைகளில் இப்போது ஒரே மாதிரியான பலகைகள் உள்ளன. பக்கவாட்டுப் பாதைகள் கூட பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நகரின் அனைத்து பகுதிகளிலும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. ஜனவரி 16 அன்று ராமோத்சவ் தொடங்கியது மற்றும் ஸ்ரீ ராம் கதா பார்க், பஜன் சந்தியா ஸ்தல், துளசி உத்யன் மற்றும் ஸ்ரீ ராம் பிரேக்ஷாக்ராஹ் ஆகிய நான்கு இடங்களில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டுப்புற நடனங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன. அவை இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது. மற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் இந்த மாதம் முழுவதும் தொடரும் என்று அயோத்தி கலாச்சார மையத்தைச் சேர்ந்த ரிது டிக்ஸி கூறினார்.
ராமர் அயோத்திக்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாடுகிறோம். இது மிகப் பெரிய தீபாவளி. இதை எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும். இங்குள்ள சூழலை வார்த்தைகளால் விவரிக்கவோ அல்லது கேமராவால் படம்பிடிக்கவோ முடியாது என்று நாட்டுப்புற நடன கலைஞர் பிரக்யா திவான் தெரிவித்துள்ளார்.