அயோத்தி இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழா, உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமல் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா இன்று மதியம் நடைபெறுகிறது.
விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரான் பிரதிஷ்டை செய்கிறார். இவ்விழாவில் நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் மட்டும் கலந்துகொள்கிறார்கள். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, நாளை முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
அயோத்தி இராமர் கோவிலை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே, அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் புதிதாக மகரிஷி வாலமீகி சர்வதேச விமானம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30-ம் தேதி பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல, அயோத்தில் ஏற்கெனவே இருந்து இரயில் நிலையில், 450 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட்டு, அயோத்தி தாம் இரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு, கடந்த 30-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அயோத்தி இராமர் கோவில் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இக்கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறியிருக்கிறார். மேலும், முக்கியப் பிரமுகர்கள் பலரும் அயோத்தி கோவில் பற்றி புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி இராம் லல்லா கோவில் கும்பாபிஷேகம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அலோக் குமார், “இந்தியாவில் தெற்கு, வடக்கு என்ற பாகுபாடு இல்லை. அயோத்தி இராம் லல்லா கோவில் கும்பாபிஷேகம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது.
சில மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளாதது அரசியல் காரணங்களுக்காகத்தான். ஆனால், அவர்களின் உண்மையான மனநிலை மற்றும் நினைவுகள் பகவான் ஸ்ரீராமரிடம்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.