தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி முதல் டிசம்பர், 9 வரை நடந்தது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, பல லட்சம் மனுக்கள் வந்தன.
அவற்றை ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி, ஜனவரி 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரானது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று வெளியிடுகிறார்.
இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர்கள் இதனை வெளியிடுகின்றனர்.
சென்னையை பொறுத்த வரை தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
மக்களவை தேர்தலுக்கு, இன்று வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் இறுதி வாக்காளர் பட்டியலாகும். இதன்பின், பெயர் சேர்க்கப்பட்டால், அது துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.