புதுடெல்லியில் இன்று நடைபெறும் விழாவில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் 2024 விருது பெற்ற 19 சிறுவர் சிறுமிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.
கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பான சாதனைகள் புரியும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஆண்டுதோறும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 19 குழந்தைகளுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று விருது வழங்குகிறார். நிகழ்ச்சிக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
தொடர்ந்து, பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாடுகிறார். விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.
இந்த தேசிய அங்கீகாரம், நாடு முழுவதும் உள்ள மற்ற இளைஞர்களை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. இளம் மனங்களின் திறமைகளை வளர்த்து தேசிய அரங்கில் கொண்டாடும்போது எழும் எல்லையற்ற சாத்தியக் கூறுகளுக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது.