ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78-வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். பின்னர், ஐ.நா. பொதுச் சபைத் தலைவரிடம் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதன் பேரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78-வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பலதரப்பு விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருடன், டென்னிஸ் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா – ஐ.நா. இடையிலான உறவுகளை முன்னேற்றுவதற்கும், இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்திருக்கிறது.
இந்த விஜயத்தின்போது, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு டென்னிஸ் அஞ்சலி செலுத்துகிறார். மேலும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்த வட்ட மேஜை கூட்டத்திலும் பிரான்சிஸ் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, பன்முகத்தன்மை மற்றும் அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த இந்திய உலக விவகார கவுன்சிலில் புதன்கிழமை பொது உரையை நிகழ்த்துவார். மேலும், ஜெய்ப்பூர் மற்றும் மும்பைக்கு பயணம் செய்யும் பிரான்சிஸ், மும்பையில் உள்ள 26/11 நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், தேசிய பங்குச் சந்தைக்குச் சென்று, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட சீர்திருத்தப் பன்முகத்தன்மைக்கான புதிய நோக்குநிலை குறித்து உரையாற்றுவார். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரான்சிஸ் பங்கேற்கிறார்.