அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவைக் காண நேரில் வந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, இவ்விழாவுக்கு எனது இஷ்ட தெய்வமான ஹனுமானே நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இந்த விழாவுக்கு சுமார் 8,000 முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் திரைப் பிரபலங்களும் அடக்கம். அந்த வகையில், நடிகர் சிரஞ்சீவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, சிரஞ்சீவி தனது மகன் மற்றும் மனைவியுடன் இன்று அயோத்திக்கு நேரில் வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, “இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இதை ஒரு அரிய தருணமாக நாங்கள் பார்க்கிறோம். என்னுடைய இஷ்ட தெய்வமான ஹனுமானே என்னை நேரில் வந்து இந்த விழாவுக்கு அழைத்ததைப் போல உணர்கிறேன். இந்த பிரதிஷ்டை நிகழ்வைக் காண நாங்கள் மிகவும் பாக்கியம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.