இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலையை வடிவமைத்த சிற்பியான அருண் யோகிராஜும் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூமியில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனது முன்னோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராமர் ஆகியோரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல் உணர்கிறேன் என தெரிவித்தார்.
ராமரையும் அனுமனையும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்றார்போல அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானதில் தவறில்லை என சிற்பி அருண் யோகிராஜ் குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.