திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருகன்குளம் காட்டு ஸ்ரீராமர் திருக்கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ளது அருகன்குளம். இந்த பகுதியில் மரங்கள் மற்றும் அழகிய சோலைகள் சூழ அமைந்திருக்கிறது ஸ்ரீகாட்டு ராமர் ஆலயம். ஸ்ரீராமன் ஜடாயு க்கு மோட்சம் அளித்த இடமாகப் பல திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அவற்றில், இந்தத் தலமும் ஒன்று.
அப்படி, ஸ்ரீராமனைத் தரிசித்த ஜடாயு அவருடைய மணக் கோலத்தைத் தனக்குக் காட்டும்படி ராமரிடம் வேண்டிக் கொண்டார். இதனால், சீதாதேவி சமேதராக ஜடாயுவுக்கு மணக் கோலத்தைக் காட்டியருளினாராம் பகவான் ராமர். இவ்வாறு திருமணக் கோலத்தைக் காட்டி அருளியதால், காட்சியளித்த ராமன் என்றும், அதுவே வழக்கில் ஸ்ரீகாட்டு ராமன் என்று மருவியதாக கூறப்படுகிறது.
கல்யாண கோலம் காட்டிய தலம் இது என்பதால், தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குத் திருணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் கை கூப்பிய நிலையில் பொிய உருவத்தில் ஸ்ரீஅபயகஸ்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறாா். இத்தகைய சிறப்பு மிக்க காட்டு ஸ்ரீராமர் கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, நவகலசங்கள் மற்றும் ராம ஜென்மபூமி அழைப்பிதழ் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமா், சீதை, லெட்சுமணர் ஆகியோருக்கு மஞ்சள் பொடி, வாசனைப் பொடி, மாபொடி, பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, அபயகஸ்த ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் நடைபெற்றன.
பின்னா், கலசங்கள் ஆலய பிரதஷணமாகக் கொண்டு வரப்பட்டு, மூலவா் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், திரளான ராம பக்தா்கள் கலந்து கொண்டனர்.