இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி இன்று ஹைதராபாத்தில் பிசிசிஐ சிறந்த இந்திய வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்க உள்ளது.
இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படவுள்ளது. அதே போன்று சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்டுள்ளது.
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 15 சதங்கள் உட்பட 6938 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 280 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போதும், 1985 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்த ரவி சாஸ்திரி அதோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி இரண்டு முறை இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக கிரிக்கெட் உடனே பயணிக்கும் இவருக்கு பி.சி.சி.ஐ வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கவுள்ளது.
கடந்த 2006-2007 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டன. சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ விருதுகள் கடைசியாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிசிசிஐ தற்போது விருதுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.