அயோத்தி இராமர் கோவிலில் பால இராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், சீதா தேவியின் சொந்த ஊரான ஜனக்பூரில் பக்தர்கள் 2.5 இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், கடந்த 22-ஆம் தேதி குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு, கோவில்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்தியர்களின் பல நூற்றாண்டு கனவு நிறைவேறியதால், நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
அயோத்தி இராமர் கோவிலில், பால இராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரத்தில், நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாஜக, இந்து முன்னணி சார்பில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அயோத்தியில் பால இராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக, வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிப்பட வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையேற்று, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பிராண பிரதிஷ்டை நாளை கொண்டாடும் வகையில், சீதா தேவி பிறந்த ஊரான நேபாள நாட்டின் ஜனக்பூரில் பக்தர்கள் 2.5 இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர். இதனால், ஜனக்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.