அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம், பிரதமர் மோடியின் தேசப்பற்றும், தெய்வப்பற்றும் வெளிப்பட்டுள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார்.
மேலும், அயோத்தியில் இராமர் கோவில் அமைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பிரதமர் மோடிதான். எனவே, பிரதமர் மோடியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் பலரும் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் மோடியை பாராட்டி இருக்கிறார். திருவாரூா் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்த நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வந்து, இராமர் தொடர்புடைய புண்ணியத் தளங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
இதன் பிறகே, இராமர் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இதன் மூலம் அவரது தேசப்பற்றும் தெய்வப்பற்றும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஆன்மீக விவகாரங்களில் தி.மு.க. அரசின் நிலைப்பாடு நேர்மாறாக இருக்கிறது.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற இராமர் சிலை பிரதிஷ்டை நேரலை நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரையை அகற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும்.
அதேபோல, சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாடு ஆட்சி அதிகாரத்தையும், பண பலத்தையும் காட்டும் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. த.மா.கா.வை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துபேசி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறையில் குளறுபடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.