ராமர் கால் பதித்த இடங்கள் சுற்றுத்தலமாக மாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் நேற்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நல்லாட்சி நிறுவப்பட்டுள்ளது. உண்மையில், ராம ராஜ்ஜியம் வரவுள்ளது. சுமார் 142 கோடி மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அயோத்தி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் 11,101 விளக்குகள் ஏற்றி வைத்து மோகன் யாதவ் வழிபாடு செய்தார். நிவாரி மாவட்டம் ஓர்ச்சா நகரில் உள்ள ராமராஜா கோவிலில் கும்பாபிஷேக விழாவிலும் அவர் பங்கேற்றார்.