உலகளாவிய பங்குச் சந்தை தரவரிசையில் இந்தியா ஹாங்காங்கை முந்தி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு ஹாங்காங் பங்குச்சந்தையை முந்தியுள்ளது.
ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, திங்கள்கிழமை சர்வதேசச் சந்தையில் வர்த்தக முடிவில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பு, 4.33 டிரில்லியன் டாலராக உள்ளது, ஆனால் ஹாங்காங் பங்குச்சந்தை 4.29 டிரில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 72,039.20 புள்ளிகளை அடைந்தது.
இதன் இந்தியப் பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 3,75,97,315.42 கோடி ரூபாயாக உள்ளது, அதாவது 4.51 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இது இந்தியாவை உலக அளவில் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக மாற்றியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு டிசம்பர் 5 அன்று முதல் முறையாக $4 டிரில்லியனைத் தொட்டது, அடுத்த 45 நாட்களில் 4.5 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.