சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற உளவுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
சர்வதேச நாடுகளின் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் இந்தியப் பெருங்கடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
எனவே, சீனா கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தனது உளவுக் கப்பல்களை அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது. மேலும், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.
அதோடு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்கள் மூலம் இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை குறித்து மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும்.
அதேபோல, சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய இராணுவத் தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க முடியும் எனவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன உளவுக் கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் இலங்கைக்கு வரவிருந்த சீன ஆய்வுக் கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது. இந்த சூழலில், இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.
அதன்படி, மாலத்தீவை மையமாக வைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.
இந்தக் கப்பல் நேற்று காலை இந்தோனேஷியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது. இக்கப்பல் மாலத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இக்கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலின் முக்கியப் பகுதிகளை ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தளவுக்கு இந்தக் கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், இராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன கருவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதே கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக அக்கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, தற்போது மாலத்தீவு உதவியுடன் சீனா அக்கப்பலை இந்தியப் பெருங்கடலில் ஊடுருவச் செய்திருக்கிறது.
இதனிடையே, அந்தக் கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், சீன உளவுக் கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.