அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இனி ஆண்டுதோறும் இராமர் கோவிலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு, நேற்று திறப்பு விழா மற்றும் இராமர் சிலை பிரான் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் அயோத்தி சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்து திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி இராமர் கோவிலுக்கு வருவேன்” என்றார்.
அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவில், நடிகர் தனுஷ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.