மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், நமீபியா நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி ஒன்று, மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
கடந்த 1952-ஆம் ஆண்டு நாட்டில் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால், சிவிங்கி புலி இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக, மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவில் மீண்டும் சிவிங்கி புலிகளை அறிமுகப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான நமீபியாவிடம் இருந்து சிவிங்கி புலிகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதனடிப்படையில், நமீபியாவிலிருந்து சிறப்பு சரக்கு விமானங்கள் மூலம் 8 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்துவிட்டார். மேலும், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டன.
இதில், 7 சிவிங்கி புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தன. மீதமுள்ள சிவிங்கி புலிகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜ்வாலா என்ற சிவிங்கி புலி 3 குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, குனோவின் புதிய குட்டிகள்! ஜ்வாலா என்று பெயரிடப்பட்ட நமீபியா சிவிங்கி புலி மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஆஷா என்ற சிவிங்கி புலி குட்டிகளைப் ஈன்றெடுத்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். பாரதத்தின் வனவிலங்குகள் செழிக்கட்டும் என்று கூறியுள்ளார்.