ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆண்களுக்கான காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் ஜோகோவிச் பங்குபெற்றார்.
இவருடன் அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் பிரிட்ச் விளையாடினார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதேபோல் இன்று பெண்களுக்கான காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 4-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ கவூப் மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீராங்கனை மர்டா கோஸ்டியூக் ஆகியோர் விளையாடினர்.
இதில் அமெரிக்காவின் கோகோ கவூப் 7-6 (8-6), 6-7 (3-7) 6-2 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்டியூக்கை வீழ்த்தினார். இதன் மூலம் இவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.