புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை முதலாவது சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி நாளை தொடங்குகிறது
தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமும் இணைந்து முதன்முறையாக புது தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நாளை முதல் பிப்ரவரி 12 வரை நடத்துகிறது.
10 என்ஃபீல்டு 350 சிசி புல்லட் பைக்களைப் பயன்படுத்தி இந்தப் பேரணி நடத்தப்படும். இந்த இரண்டு நிறுவனங்களின் சித்த மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், வாகன ஓட்டுநர்களாகப் பங்கேற்பார்கள்.
சித்தர் தினம் 2023 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய அளவில் சித்த மருத்துவ முறையின் சிறப்பு மற்றும் பயன்களை பரப்புவதற்காக இந்தப் பிரச்சாரப் பேரணி நடத்தப்படுகிறது.
இந்தப் பேரணியை புதுதில்லியில் இருந்து ஆயுஷ் துறை, துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
ஆயுஷ் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திர பாய், ஆயுஷ் துறை செயலர் திரு வைத்யா ராஜேஷ் கொடேச்சா, ஆயுஷ் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்தப் பயணக்குழு வரும் வழியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 21 நகரங்களில் நிறுத்தப்படும். நிறுத்தும் இடங்களில் பிராந்திய முகமைகள், பிராந்திய பங்கேற்பாளர்கள் மற்றும் துணைக்குழுவுடன் இணைந்து இக்குழுவினர் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். துண்டுப் பிரசுரங்கள், மருந்துப் பெட்டிகள், சிற்றேடுகள், சித்த மருத்துவப் பெட்டிகள் போன்றவற்றை விநியோகிப்பார்கள்.
இந்தக் குழுவின் பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் முடிவடையும்போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சித்த மருத்துவ வல்லுநர்கள், பல்வேறு சித்த மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள்.
தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெற்று வரும் ஆயுஷ் முறைகளின் ஓர் அங்கமான சித்த மருத்துவ முறையின் பரவலுக்கு இதுவரை கண்டிராத நிகழ்வாக இது இருக்கும் என்று ஆயுஷ் துறை இணைச்செயலாளர் பேராசிரியர் மீனாகுமாரி கூறினார்.