புதுச்சேரியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த, 3 மாடி குடியிருப்பு கட்டடம் முழுவதுமாக சரிந்து விழுந்தது.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அருகே உள்ள உப்பனாறு கால்வாயில் பொதுப்பணித்துறை மேற்பாா்வையில், கடந்த ஓராண்டாக சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கால்வாயின் பக்கவாட்டு பகுதியை சீரமைத்து சுவர் எழுப்புதற்கான பணிகள் நடந்தது. இதற்காக, கால்வாயின் பக்கவாட்டு பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, புதிதாக கட்டியிருந்த 3 மாடிகளைக் கொண்ட வீடு முழுவதுமாக சரிந்து விழுந்தது. வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில், வீடு சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.