யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நடைபெறும் ’என் மண், என் மக்கள்’ யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜக கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
என் மண் என் மக்கள் யாத்திரை, 151 தொகுதியாக திருவிடை மருதூரில் இன்று தொடங்குகிறது. மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. கே. பி. முனுசாமிக்கு என் மீது வன்மம் உள்ளது. காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று மோடி என்பவர் ஒருவரே எனத் தெரிவித்தார். இவர்களை மீண்டும் உருவாக்க முடியாது. பாஜகாவில் 20 கோடி தொண்டர்கள் உள்ளனர்.
யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி எனத் தெரிவித்தார்.
“சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாடு, கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று அனைத்து நிகழ்வுகளையும் செய்தனர். திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமுத்துப்போன மிச்சர். ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். இந்தியாவை பொறுத்தவரை ஒற்றைகட்சியாக பாஜக உள்ளது.
பிரதமர் மோடி திருச்சி மீது அதிக பற்றுடன் இருக்கிறார். பராம்பரிய நகரமாக அவருக்கு திருச்சி மீது ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. திருச்சி தலைநகராக வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதனால் தான் புத்தாண்டின் முதல் நிகழ்வாக திருச்சியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார்” என்றார்.
மேலும், “ எங்களுக்கும், திருச்சி பற்றிய ஒரு மிகப்பெரிய அக்கறை உண்டு. பாஜக சார்பில் மிகச்சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம். திமுகவின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன். ஒற்றைக் குடும்ப ஆட்சி என்பதை நிறுத்தவே பாஜக விரும்புகிறது” என தெரிவித்தார்.