மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுகளை அகற்றி சுத்தப்படுத்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், இதற்கு நமாமி கங்கா திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 25 ஆண்டுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தொலை நோக்குத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.
ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கம் “நீர் தொலைநோக்குப் பார்வை 2047 – முன்னோக்கிய பயணம்” என்ற தலைப்பில் அகில இந்திய செயலாளர்கள் மாநாட்டை இன்று மாமல்லபுரத்தில் தொடங்கிவைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கூடத்தில் பேசிய மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்,
நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலைப் பின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மை நிலை, நீர்ப் பயன்பாட்டுத் திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்பு ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
மறுசுழற்சி மூலம் தண்ணீரை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், இந்தியா முழுவதும் உள்ள நிலத்தடி நீர் பரப்பளவு 25 லட்சம் சதுர கிலோ மீட்டர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 சதவீதம் குறைந்துள்ளதைக் கண்டறிந்து, மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் தற்போது இது 10 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது என்றார்.
நீர்வள மேலாண்மையில் நீடித்த கொள்கையை வகுக்க, மத்திய-மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து திட்டமிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயத்தில் தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துப் பற்றாக்குறையைப் போக்க நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனகூறினார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத் துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நீர்த் துறையில் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிகரமான திட்டங்களை எடுத்துரைப்பதற்கும், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியகங்கள் மற்றும் நீர்த் துறையில் பணிபுரியும் பிற பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கும் இந்த மாநாடு ஒரு தளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.