இந்த ஆண்டு நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நேற்றையப் போட்டிகளின் முடிவில் தமிழகம் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற 110 மீ தடை ஓட்டம், 400 மீ ஓட்டம், ஸ்குவாஷ், சைக்கிளிங்கில் பெண்களுக்கான தனிநபர் பர்சுயிட் & 10 கிமீ ஸ்கிராச் மற்றும் யோகாசனத்தில் ஆர்டிஸ்டிக் ஜோடி பிரிவு ஆகிய போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 2வது இடத்திற்குச் சரிந்தது. 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. மராட்டியம் 14 தங்கம் உள்பட 45 பதக்கங்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியது.