நேதாஜியின் கொள்கையும், தங்களது கொள்கையும் ஒன்றுதான் என்றும், இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “நவீன இந்தியாவின் சிற்பிகளில் நேதாஜியும் ஒருவர். எனவே, அவரின் வாழ்க்கை மற்றும் திறன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நன்றியறிதலுடன் மட்டுமல்லாமல், அவரது குணங்கள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளை உள்வாங்குவதை உறுதிசெய்வதற்காகவும் நாம் அவரை நினைவுகூர வேண்டும்.
நேதாஜியின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை என்றால், அதை நிறைவேற்றுவது யாருடைய பொறுப்பு? தற்போதைய தலைமுறை அதை அடைவதற்காக பாடுபடுவதை அவர் பார்த்தால் மட்டுமே அது நிறைவேறும். இந்தக் கனவுகளை ஒரு தலைமுறையில் மட்டும் நிறைவேற்ற முடியாது என்பது அவருக்குத் தெரியும். அவருக்குப் பின் வரும் தலைமுறைகள் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
நேதாஜி விரும்பியபடி, அவரது கனவான இந்தியாவை அடைய நாம் உழைக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்ன கனவுகளுடன் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தார்கள் என்பது உண்மையில் நமக்குத் தெரியுமா? சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் சுயநலத்துடன் உறங்கி விட்டோம். எனது குடும்பம் மற்றும் நான் என்பதைத் தாண்டி நாம் எதையும் பார்ப்பது கிடையாது. ஆணவம், சுயநலம் ஆகியவை தொடர்கின்றன. எனவே, நேதாஜி நமக்கு செய்ததை பெருமையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நேதாஜியின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. நமது தேசத்தில் பன்முகத்தன்மை இருந்த போதிலும், அவர் அனைத்து வேறுபாடுகளுக்கும் மேலாக நாட்டை முதன்மைப்படுத்தினார். நாட்டிற்காக இராணுவத்தை உருவாக்கி வழிநடத்தினார். இது நாட்டின் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. நேதாஜியின் கொள்கைக்கும், நமது கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்றார்.