அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ம் தேதி நிறைவடைந்த நிலையில், பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழாக்கள் நடைபெற்றன.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். விழாவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
நேற்று அதிகாலை 3 மணி முதலே அயோத்தி இராமர் கோவிலில் இராம பக்தர்கள் குவிந்தனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. உடனே, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்ய விரைந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, போலீஸார் கோவிலில் தடுப்புகளை அமைந்திருந்தனர். எனினும், தடுப்புகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் முண்டியடித்துச் சென்றனர். காலை 6 மணிக்குத் தொடங்கிய தரிசனம், இரவு 10 மணி வரை நீடித்தது.
அந்த வகையில், முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் குழந்தை இராமரை தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அனைத்து பக்கதர்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆகவே, பக்தர்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.