தேசிய ரோப்வே திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 200 ரோப்வே திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார்.
புதுடெல்லியில் ‘ரோப்வே: சிம்போசியம் – கம்-எக்ஸிபிஷன்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அமைச்சர் நிதின் கட்கரி, “நகரங்களில் நெரிசலைக் குறைக்கவும், மாசுபாட்டைக் குறைக்கவும், பயண நேரங்களை ஒழுங்குபடுத்தவும் நகர்ப்புற விரைவான போக்குவரத்து அமைப்பில் ரோப்வேகளை ஒருங்கிணைப்பது முக்கியமாகும்.
ரோப்வேயை பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்ற வேண்டியதும் அவசியம். ஒட்டுமொத்த திட்டச் செலவைக் குறைப்பதன் மூலம் ரோப்வைக்களை பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்றுவது மற்றும் நாட்டில் ரோப்வே நெட்வொர்க்கை உருவாக்க பொது மற்றும் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும்.
மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றுலாவை வளர்ப்பதில் ரோப்வேகளின் இரட்டைப் பங்கையும், நகர்ப்புற பொதுப் போக்குவரத்தில் ரோப்வேயின் குறிப்பிடத்தக்க ஆற்றலையும் நாம் கவனிக்க வேண்டும். பர்வத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், கணிசமான கட்டுமான மதிப்பீட்டில் 60 சதவீதத்தை ரோப்வே பாதைகளுக்காக கலப்பின வருடாந்திர முறையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தேசிய நெடுஞ்சாலைகளுக்கு வழங்கப்படும் 40 சதவீத மதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு. இந்த நடவடிக்கையானது ரோப்வேகளின் வளர்ச்சியில் பங்குபெற அதிக தனியார் நிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியின்றி ரோப்வே திட்டங்களுக்கு மாநிலங்கள் நிலத்தை வழங்கும்.
மேலும், மேக்-இன்-இந்தியா முன்முயற்சியின் கீழ், ரோப்வே உதிரிபாகங்கள் தயாரிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் குறியீடுகளின் தரப்படுத்தலைக் கொண்டு வருவதற்கும், ரோப்வே தொழிற்துறையை மாற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது. மேலும், 5-வது இடத்தில் இருந்து 3-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிறது. ஆகவே, காலக்கெடு, செலவு மற்றும் திறமையான, தரமான, நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின் பேசுகையில், “குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு நேரடியாக தொடர்புடையது. அரசாங்கம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதோடு, நாட்டில் ‘வியாபாரத்தை எளிதாக்குவதை’ மேம்படுத்தியுள்ளது” என்றார்.