உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா, ஞானவாபி ஆகிய மசூதி வளாகங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கே.கே.முகமது தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் இருந்த பாபர் மசூதி, முகலாய மன்னர் பாபர் ஆட்சி காலத்தில் இராமர் கோவிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்றும், இதை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்துக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரப்பட்டு வந்தது.
எனினும், பல்வேறு போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் இந்துக்களுக்குச் சாதகத் தீரப்பு வந்தது. தற்போது அங்கு பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல, மதுராவில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா மசூதி, கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்ம பூமி என்றும், முகலாய ஆட்சி காலத்தில் அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
அதேபோல, காசியில் அமைந்திருக்கும் ஞானவாபி மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் 17-ம் நூற்றாண்டு, காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், தொல்லியல் துறை நடத்திய ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, மேற்கண்ட இரு மசூதிகளையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்துக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், ஷாஹி ஈத்கா மற்றும் ஞானவாபி ஆகிய 2 மசூதிகளையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஆய்வாளர் கூறியிருக்கிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.கே.முகமது. இவர் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராவார். அயோத்தியில் பாபர் மசூதி தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, 1976 – 77-ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது, இந்தக் குழுவில் கே.கே.முகமதுவும் இடம் பெற்றிருந்தார்.
அந்த சமயத்தில், பாபர் மசூதி வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியதில், இவரும் ஒருவர். அதோடு, இந்துக்களுக்கு உரிமை உள்ள இடங்களை அவர்களிடமே ஒப்படைக்கும்படி நீண்ட காலமாகவே முஸ்லீம்களிடம் வலியுறுத்தி வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில், முன்னாள் தொல்லியல் துறை ஆய்வாளர் கே.கே.முகமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் மதுராவில், கிருஷ்ணர் கோவிலையொட்டி கட்டப்பட்டுள்ள ஷாஹி ஈத்கா மற்றும் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி அமைந்திருக்கும் ஞானவாபி வளாகம் ஆகியவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த வளாகங்கள் ஒளரங்கசீப்புடன் மட்டுமே முஸ்லீம்களை இணைக்கின்றன. ஆனால், இந்துக்களுக்கு இந்த தளங்கள் சிவன் மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடையவை. நம்பிக்கையின் காரணமாக இந்துக்கள் எதிர்கொள்ளும் வேதனைகளை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் அறிவியல்பூர்வ ஆதாரம் எங்கு என்று கேட்க முடியாது. ஆகவே, இந்துக்களுக்கு சொந்தமான இடத்தை அவர்களுக்கே கொடுக்க வேண்டும்” என்றார்.