அயோத்தி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று இராம ஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், முகலாய மன்னர் பாபர் காலத்தில் இராமர் கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. இதையடுத்து, இராம ஜென்ம பூமியை மீட்க இந்துக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1992-ம் ஆண்டு கரசேவையின் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பின்னர், அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதி கோரி இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இஸ்லாமியர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும், இவ்வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், இராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழாக்கள் நடைபெற்றன.
இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், இஸ்லாமியர்களும் அடக்கம்.
அந்த வகையில், இராம ஜென்ம பூமி – பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரியும் கலந்துகொண்டார். பின்னர், இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இராமர் கோவில் பிரதிஷ்டையில் கலந்துகொண்டது நல்ல அனுபவமாக இருந்தது.
அயோத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதுபோல, சிறிய பிரச்சனைகளுக்காக சண்டைப் போட்டுக் கொள்ளாமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இராமர் தற்போது அயோத்திக்கு வரவில்லை, 1949-ம் ஆண்டே வந்து விட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் அயோத்தி பிரச்சனை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இராமர் கோவில் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது. வேறு எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறவில்லை. உண்மையில், இராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க.தான் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
இராமர் கோவில் விழாவில் ஒற்றுமையை வலியுறுத்திய மோகன் பகவத் பேச்சை வரவேற்கிறேன். தற்போது இஸ்லாமியர்கள் நன்கு படித்திருக்கிறார்கள். சுயதொழில் புரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு அரசு வேலை எல்லாம் தேவையில்லை” என்றார்.