சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் “ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்” பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், முழு உலகமும் பாரதத்தையே உற்று நோக்குகிறது என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவின் 75-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் “ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்” (நமது அரசியலமைப்பு, நமது மரியாதை) என்கிற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்சாரத்தை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் இன்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெக்தீப் தன்கர், “மறக்கப்பட்ட மாவீரர்களை தேசம் நினைவுகூருகிறது. நாட்டு மக்கள் பாரதத்தை மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். நாடு 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிரது. இது விரைவில் 3-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும். முழு உலகமும் பாரதத்தையே உற்று நோக்குகிறது. நம் நாட்டு மக்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களால் முடியாதது எதுவுமில்லை” என்றார்.
நிகழ்வின்போது, நியாய சேது தொடங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க படியாகும். இது சட்ட சேவைகளை கடைசி மைல் வரை நீட்டிக்கவும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
பிரச்சாரத்தின்போது உள்ளடக்கப்பட வேண்டிய சில கருப்பொருள்கள், சப்கோ நியாய் – ஹர் கர் நியாயா, நவ் பாரத் நவ் சங்கல்ப் மற்றும் விதி ஜாக்ரிதி அபியான் ஆகியவை அடங்கும்.
பின்னர், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது உரையில், “இன்று தொடங்கப்பட்ட முயற்சிகளின் நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக, ஒதுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து தீர்வுகளும் உள்ளன. முத்தலாக் போன்ற சமூக அவலங்கள் நீக்கப்பட்டதற்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கும் அரசியலமைப்புச் சட்டமே காரணம்” என்றார்.
இந்த நிகழ்வில், பாஷினி மற்றும் இக்னோவின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீதித்துறையுடன் தங்கள் ஒத்துழைப்பை முறைப்படுத்தினர். பாஷினி உடனான கூட்டு நீதியை அணுகுவதில் மொழியின் தடைகளை உடைக்கும். இக்னோவுடனான கூட்டாண்மை, சட்டத் துறையின் பல்வேறு துறைகளில் சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், சட்ட உதவி மற்றும் ஆதரவின் பல்வேறு துறைகளில் அவர்களின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.