திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கடசி தனித்து போட்டியிடும் என்றும், திரிணாமுல் முன்மொழிந்த சீட் பகிர்வு வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை மேற்கு வங்கத்தில் நுழைவது குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நான் இண்டி கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மரியாதை நிமித்தமாக கூட மேற்கு வங்கத்திற்கு வரப்போவதாக அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என தொடர்ந்து கூறி வருவதாக அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் இந்த முடிவு இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மேலும் சில கட்சிகளும் இண்டி கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.