ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை இரு தரப்பினரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதனை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.
இது தொடர்பாக, இந்துக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வும் நீண்டு கொண்டே சென்றது. நிறைவாக, தொல்லியல் துறை ஆய்வறிக்கையை டிசம்பர் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 18-ம் தேதி ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதேசமயம், இந்த ஆய்வறிக்கையை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று தொல்லியல் துறை சார்பில் வேண்டுகோளும் வைக்கப்பட்டது.
இதையடுத்து, வாரணாசி நீதிமன்றமும் ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. எனினும், ஞானவாபி மசூதி தரப்பில் ஆய்வறிக்கையை வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். ஆனால், அதை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்திருப்போம், பொதுவெளியில் வெளியிட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இரு தரப்பினரும் ஆய்வறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.