அயோத்தி ராமர் கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைத்துள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சரத் சர்மா தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைத்துள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சரத் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ” நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பகவான் ஸ்ரீ ராமர் மீது கொண்டுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பணம், தங்கம் மற்றும் வெள்ளியை நன்கொடையாக வழங்குகிறார்கள். பக்தர்கள் பகவான் ஸ்ரீ ராமர் மீது தூய்மையான அன்பும், பயபக்தியும் கொண்டுள்ளனர் ” என்று கூறினார்.
மேலும் அவர், ” பகவான் ஸ்ரீ ராமர் விஷ்ணுவின் அவதாரம், அவரது மனைவி லட்சுமி தேவி. ஆகையால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால் அயோத்தியில் ராமர் கோவில் எப்போதும் பொருளாதார ரீதியாக செழிப்பாக இருக்கும்.
அந்த வகையில் பக்தர்களும் பல்வேறு வழிகளில் நன்கொடை அளித்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஏதாவது ஒன்றை தானம் செய்கிறார்கள். தானியங்கள், ஆடைகள், பழங்கள், பொருட்கள் என நன்கொடையாக பக்தர்கள் அளித்துள்ளனர்.
இதுவரை ராமர் கோவிலுக்கு நேரில் வந்த பக்தர்கள் 2-3 நாட்களில் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். ஆன்லைனில் நன்கொடையாக வழங்கப்படும் தொகை வங்கிகளால் கணக்கிடப்படும். அது பற்றிய புள்ளி விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
இதற்கிடையில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்று அதிகாலை முதலே கடும் குளிர், மூடு பனி ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டுள்ளனர்.