மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி காட்டி இருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து தற்போது அஸ்ஸாம் மாநிலத்தை வந்தடைந்திருக்கிறது.
அப்போது, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாவைப் பற்றி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார். இதனிடையே, கடந்த 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தி யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல, அங்குள்ள பல்கலைக்கழத்துக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்ப்பட்டது.
எனவே, ராகுல் காந்தி பஸ் மீது ஏறி நின்று பேசினார். மேலும், ராகுலுக்கு தடை விதிக்கப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் சாலையில் இருந்து இரும்புத் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இதையடுத்து, மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக ராகுல் காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். எனினும், இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா, “நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்தக் குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தும்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை என்று கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கௌகாத்தியில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.