குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது மக்கள், தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடியாட்சி என அழைக்கப்படுகிறது.
‘மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசு’ என குடியரசு என்ற வார்த்தைக்கு மிகச்சரியாக இலக்கணம் வகுத்து தந்தவர் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.
அப்படிப்பட்ட மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் இந்தியாவுக்கு என்று தனியாக அரசியலமைப்பு சட்டங்கள் இல்லை.
ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய சட்ட திட்டங்களையே பின்பற்றப்பட்டது. இந்தியாவிற்கு என்று தனியாக அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்பதை உணர்ந்த இந்திய அரசு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழு அமைக்கப்பட்டு இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்டது.
முகவுரை, விதிகள், அடிப்படை கடமைகள், உரிமைகள்,அட்டவணைகள், திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளை இந்திய சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அந்த கோரிக்கை 1947 வரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை. முதலில் சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 26 ஆம் தேதிக்கு கௌரவிக்கும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தை ஜனவரி 1950 ஆம் இயற்ற அரசியலமைப்பு வரைவுக்குழுவில் முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் நாள் இந்தியக்குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினம் அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைப்பார்.
குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் நாட்டிற்கு சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு படைகளின் அலங்கார அணிவகுப்புகளும் நடைபெறும்.
நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அலங்கார ஊர்திகளும் நடைபெறும்.
டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றுவதை போல் மாநிலங்களில் ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதுடன் காவலர் அணிவகுப்பு, அரசுத்துறை அலங்கார ஊர்திகளையும், கலைநிகழ்ச்சியையும் பார்வையிடுவார். மேலும் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.