நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. ஆகவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்தக் கூட்டத் தொடரில்தான் அவை விதிமுறைகளின் கீழ் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “எதிர்கட்சிகள் தாங்கள் விவாதிக்க விரும்பும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற சபாநாயகர்களிடம் நோட்டீஸ் அளிக்கலாம். அந்த நோட்டீஸ்கள் ஏற்கப்படும் பட்சத்தில், அது குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.
இந்த நடைமுறையை அரசு எப்போதுமே கடைப்பிடித்து வருகிறது. அதேபோல, கூட்டத் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-வது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பட்ஜெட் தயாரிப்பு டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், பழங்கால வழக்கப்படி பட்ஜெட் தயாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கும் சம்பிரதாயம் இன்றுவரை கடைப்பிடிக்கப்படு வருகிறது.
அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நேற்று அல்வா தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.