இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா, இன்று ( ஜனவரி 26 ) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபரான இம்மானுவேல் மேக்ரான் நேற்று இந்தியா வந்தார்.
தனி விமானம் மூலமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தார். அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பிறகு ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை முதலில் பார்வையிட்ட மேக்ரான் அதன் பின், அங்கு நடந்த கலாச்சார நிகழ்ச்சி, கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்த்து வியந்தார்.
இதையடுத்து, ஜந்தர் மந்தரில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார். பின்பு அருகில் இருந்த 18ம் நுாற்றாண்டு விண்வெளி ஆய்வுக் கூடத்தை இருவரும் சுற்றிப் பார்த்தனர். இதை பாரம்பரிய கட்டடமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
அதன் பின், ஜெய்ப்பூர் நகரை சுற்றிப் பார்ப்பதற்காக, அதிபர் மேக்ரானை திறந்தவெளி ஜீப்பில் பிரதமர் அழைத்து சென்றார். இருவரும் ஹவா மஹால் முன் இறங்கி, 1,000 ஜன்னல்கள் உடைய அந்த மாளிகையின் அழகை கண்டு ரசித்தனர்.
அதன் அருகே இருந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் இருநாட்டு தலைவர்களும் சென்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் மாதிரியை வாங்கி, மேக்ரானுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
அதற்கான தொகையாக 500 ரூபாயை, ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை வாயிலாக பிரதமர் செலுத்தினார். கடையை விட்டு வெளியே வந்ததும், அங்குள்ள சிறிய டீ கடையில் நின்ற பிரதமர் மோடி, அதிபர் மேக்ரானுக்கு சூடான மசாலா டீ வாங்கிக் கொடுத்தார்.
டீக்கு பணம் பெற்றுக் கொள்ள கடைக்காரர் மறுத்தார். பிரதமர் வலியுறுத்தி சொன்னதும், 2 ரூபாய் தரும்படி கூறினார். அந்த தொகையையும், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை வாயிலாகவே பிரதமர் செலுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.