குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,900 புடவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில் குடியரசு தின அணிவகுப்பை காணும் கர்தவ்யா பாதையில், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் புடவை கண்காட்சி நடைபெற்றது.
கலாச்சார அமைச்சகத்தின் ‘ஆனந்த் சூத்ரா’ கண்காட்சியில் பல்வேறு இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 1,900 புடவைகள் மற்றும் திரைச்சீலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்திய ஜவுளிகளின் செழுமையான பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதையும், நாட்டின் நெசவாளர்களின் திறமையான கைவினைத்திறனைப் போற்றுவதையும் இந்த காட்சி நோக்கமாகக் கொண்டிருந்தது.
இதில் பயன்படுத்தப்படும் நெசவு மற்றும் எம்பிராய்டரி கலைகள் பற்றிய விவரங்களை அறிய ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடுகள் வைக்கப்பட்டிருந்தது.